JJNEWSTAMIL LIVE

Live NEWS Live REPORTER

பாண்டியர் வரலாறு பாதுகாப்பில் அரசு நடவடிக்கை அவசியம்

பாண்டியர் வரலாறு பாதுகாப்பில் அரசு நடவடிக்கை அவசியம் — பாண்டியர்கள் தேடி பயணம் ஆய்வுக் குழு
அமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் சந்தித்து கோரிக்கை

மதுரை, அக்டோபர் 27
மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பாக தலைமை ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் குழுவினர் மதுரையில் சந்தித்து, பாண்டியர் வரலாற்றை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மனுவை வழங்கினர்.
இச்சந்திப்பில், அனைத்து மறவர் நல கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் மேனாள் தடய அறிவியல் இயக்குநர் திரு. செ. விஜயகுமார் அவர்கள், பாண்டியர் அரசின் அடையாளமான இரட்டை மீன் சின்னத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கு வழங்கி கௌரவித்தார்.

“பாண்டியர் வரலாறு நம் பெருமை” — ஆய்வாளர் மணிகண்டன்

குழுவின் தலைமை ஆய்வாளர் திரு. மணிகண்டன் அவர்கள், “பாண்டியர் மன்னர்கள் தமிழக வரலாற்றின் அடித்தளம். அவர்கள் உருவாக்கிய ஆட்சிமுறை, கலை, கட்டிடக்கலை, கல்வெட்டு மரபு, மற்றும் நீர்ப்பாசன அமைப்புகள் இன்று உலகளவில் மதிக்கப்படுகின்றன. இந்த பாரம்பரியத்தை அரசு முறையாக பாதுகாக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும்” என தெரிவித்தார்.

குழுவினரின் முக்கிய கோரிக்கைகள்

பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பாக அமைச்சரிடம் வழங்கப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு:

  1. பாண்டியர் கால கோவில்களின் புனரமைப்பு பணிகளை அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
  2. கோவில்கள், கல்வெட்டுகள், முத்திரைகள் உள்ளிட்ட பண்டையச் சின்னங்களை அரசு ஆவணமாக பதிவு செய்து பாதுகாக்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட வேண்டும்.
  3. பள்ளி மற்றும் கல்லூரி பாடப்புத்தகங்களில் பாண்டியர் மன்னர்கள் மற்றும் அவர்களின் சாதனைகள் சேர்க்கப்பட வேண்டும்.
  4. பாண்டியர் நாணயங்கள், கல்வெட்டுகள், தொல்லியல் பொருட்கள் பற்றிய அரசு ஆதரவு ஆய்வு மையம் நிறுவப்பட வேண்டும்.
  5. மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் உள்ள பாண்டியர் அரண்மனை, கோட்டை மற்றும் கோவில் இடிபாடுகள் சுற்றுலா தலங்களாக அறிவிக்கப்பட வேண்டும்.
  6. பாண்டியர் நீர்ப்பாசன முறைகள் (ஏரிகள், குளங்கள், கால்வாய்கள்) குறித்து அரசு மீளாய்வு செய்து, அவற்றை மூல வடிவில் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  7. பாண்டியர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அரசு தயாரிக்கும் ஆவணப்படங்கள் மற்றும் கல்வி நிகழ்ச்சிகள் வழியாக இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி

குழுவினரின் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்,
“பாண்டியர் வரலாற்றை பாதுகாப்பது தமிழரின் கடமை. வரலாற்று மரபுகளை மீளுருவாக்குவதற்கான துறை ரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,” என தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில், பாண்டியநாடு அறக்கட்டளை உறுப்பினர்கள், பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழுவரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *